கலாரசிகையின் கிறுக்கல்கள்!
Tuesday, September 28, 2010
லவ் டுடே !!
திங்கள்கிழமை:
தோழன்: நாம குளோஸ் ஃப்ரண்ட்ஸ் ஆகி ஒரு வாரந்தான் ஆகுது..ஆனாலும் பாரு, ஒரு நாள் கூட பேசலைனாலும் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். நீயும் என்னை மிஸ் பண்றியா?
தோழி: ம்ம்ம்.. நானும் மிஸ் பண்றேன்(மிஸ் பண்றதா?? நமக்குத் தான் வெட்டி போடா யாரு கிடைச்சாலும், போட்டுட்டு போய்ட்டே இருப்போம்ல..)
செவ்வாய்கிழமை:
தோழன்: உன்னோட பேசிட்டே இருக்கணும் போல இருக்கு. மியூசிக்,சினிமா,எனக்கு பிடிச்சது பிடிக்காதது மனசில எதுவும் வைச்சுக்காம எல்லாத்தையும் பேசிட்டே இருக்கணும்.
தோழி: எனக்கும் அப்படி தான், என் மனசுல உள்ளத அப்படியே ஷேர் பண்ற ஒரே பிரண்ட் நீ தான்.(ரூட் விடறானோ?..)
புதன்கிழமை:
காதலன்: அழகு இருக்கிற இடத்துல அறிவு இருக்காதுன்னு சொல்லுவாங்க. ரெண்டும் இருந்தால் திமிரு இருக்கும்னு சொல்லுவாங்க. உன்கிட்ட அடக்கமான அறிவு,அமைதியான அழகு ரெண்டும் இருக்கு, நீ ஐஸ்வர்யா ராய் மாதிரின்னு பொய் சொல்லமாட்டேன்,ஆனால் நீ எனக்கு அழகா தெரியுற.. (ஐயோ..புரிஞ்சுகிட்டாளா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறாளான்னு தெரியலயே... இந்த மரமண்டைக்கு எப்படி சொன்னாலும் புரிய மாட்டேன்கிறதே, வேற லைன் விட ஆரம்பிக்கணுமோ ..)
தோழி: சீ..போ.. சும்மா நக்கல் பண்ணாதே... (ஆஹா ...இந்த உலகத்திலேயே என்னை புரிஞ்சிக்கிட்ட ஒரே ஆள் இவன் தான்..... )
வியாழக்கிழமை
காதலன்: நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர மிஸ் பண்ணிக்கிறோம்,பேசாம இருக்க முடியல. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? (இப்பவாவது மரமண்டைக்கு ஏறினால் சரிதான்..)
தோழி: நாம திக் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டோம்.உன்னை மாதிரி ஒரு ஃப்ரண்ட் கிடைக்க கொடுத்து வைச்சி இருக்கணும்..(தோழா தோழா..தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்....)
காதலன்: நான் ஒண்ணு சொல்லணும்...சொல்லட்டுமா ம்ம்ம்.. ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் யூ.(அப்பாடா ஒரு வழியா சொல்லியாச்சு,அப்படியே நம்ம இங்கிலீஷ் திறமையையும் காட்டியாச்சு..கொலை கூட ஈசியா பண்ணிடலாம் போல காதலை சொல்ல கஷ்டமா இருக்கு...)
தோழி: ஹேய்..... நான் அப்படி எல்லாம் நினைக்கவே இல்ல
வெள்ளிகிழமை:
காதலன்: சாரி.. நேத்து நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தால்.மனசுல தோண்றத அப்படியே சொல்லிட்டேன்.நான் எதையும் உன்கிட்ட மறைக்க மாட்டேன்.(அரிச்சந்திரன் வாரிசு..) காதலிக்கிறது தப்பில்லை,அதை மனசில் வச்சுகிட்டு சொல்லாமல் இருக்கறது தான் தப்பு. நீ என்னை இன்னும் நம்பலையா?
காதலி: அப்படி எல்லாம் இல்லை.ஐ அம் அல்சோ இன் லவ் வித் யூ.(நாங்க பீட்டர் விடாமலா.....நிறைய டூயட் சினிமா பாட்டு இருக்கிறதனால எதை போடறதுன்னு தெரியலை..நீங்களே ஏதாவது போட்டுக்கங்க..:-)
திங்கள்கிழமை:
காதலி: ரெண்டு நாளா ஆள காணோம், எங்க போயிட்ட? நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா?
தோழன்: எனக்கு வேலை கொஞ்சம் ஜாஸ்தி. நான் வேலை கிடைச்சு வேற ஊருக்கு நாளைக்கு போறேன்.முடிந்தால் அங்க போயிட்டு கால் பண்றேன்....
தோழி:(அட பாவி.. காதலிக்கிறேன்னு சொன்னதும் கழட்டி விட்டுவிடுவன்னு தெரிஞ்சா, அன்னைக்கே உன்னை கழட்டி விட வைச்சுட்டு வேற ஏதாவது லைன் செலக்ட் பண்ணி இருந்து இருப்பேனே.. ).
தோழன்:(காதலிக்கிறதுக்கு சம்மதம் வாங்க இந்த அளவு கஷ்ட்டப்பட்டேன்னா, கல்யாணத்துக்கு அப்பறம் ஒவ்வொரு விஷயத்துக்கும் எவ்வளவு கஷ்டப்படணும்... போதுமடா.. சாமி... நமக்கு அந்த லைன் தான் பெட்டர்.. )
Sunday, September 12, 2010
மனதில் நின்ற சுவர்ணலதா!

மாலையில் யாரோ மனதோடு பேச என்று பாடி அனைவர் மனதிலும் இடம் பெற்ற பிண்ணனி பாடகி சுவர்ணலதாவின் மரணச் செய்தி பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனின் சின்னஞ் சிறு கிளியே என்ற பாரதியார் பாடலுக்கு பாடி நீதிக்கு தண்டனை என்ற படத்தில் 1989 யில் அறிமுகமான அவர் இன்று இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சிறந்த பாடகி வரிசையில் இடம் பெற்று சாதனைகள் படைத்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கருத்தம்மா படத்தில் போறாளே பொன்னுதாயி என்ற பாடலிற்கு 1994 லில் தேசிய விருது பெற்ற அவர் அதே வருடம் கலைமாமணி விருதும் பெற்றார்.
இளையராஜாவுடன் இணைந்து சின்னத் தம்பியில் போவாமா ஊர்கோலம் என்று பாடலை நம்மை ஊர் சுற்ற வைத்த அவர் நீ எங்கே, அஞ்சாதே ஜீவா, உளுந்து விதைக்கையிலே,காதலென்னும்,என்னுள்ளே என்னுள்ளே பலமின்னல் எழும் நேரம் என்று பல பிரபல மெல்லிசைப் பாடல்களை தந்துள்ளார்.
சோகராகங்கள் மட்டுமின்றி ஆட்டமா தேரோட்டமா, குச்சு குச்சு ராக்கமா,முக்காலா முக்காபுலா,மெட்ராஸை சுத்திகாட்ட போறேன் என்றும் பல ஆர்ப்பாட்ட பாடல்கள் பாடி அசத்தியுள்ளார்.
அலைபாயுதே படத்தில் எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்று நம்மை ஏங்க வைத்த அவர் பூங்காற்றிலே பாடலில் கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகளே வருவதில்லை என்று உருக்கி சிறு வயதிலேயே(37) தன் கனவுகளை துறந்தது மிகவும் வருத்த மடையச் செய்கிறது.
சுவர்ணலதா அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!!
Tuesday, August 31, 2010
எந்திரன் திருவிழா !
ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி எல்லா ரஜினி ரசிகர்களுக்கும் தலைவர் படத்தை முதல் நாள், முதல் காட்சி தியேட்டரில் போய் கட்அவுட்க்கு ஆராத்தி எடுத்து,விசில் அடித்துப் பார்ப்பது என்பது ஒரு தனி சுகம் தான். அதற்கு தீனி போடும் வகையில், பாரபட்சம் பார்க்காமல் உலகில் பல இடங்களில் இருக்கும் எல்லா ரஜினி ரசிகர்களையும் சந்தோசப்படுத்தும் வகையில்,எந்திரன் படம் உலகெங்கிலும் ஒரே நாளில் திரையிடப்படுகிறது.
இன்ட்லி,தமிழ்மணம்,உலவு, ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற பல இணைய தளங்களில், எந்திரன் ஆடியோ கேசட் ரீலிஸ் விழா, அதை எடுத்த விழான்னு எந்திரன் திருவிழா கலை கட்ட ஆரம்பமாகிவிடட்து.மீடியாவுக்கு அதிலும் சன் டிவி, ஒண்ணும் இல்லாத படத்தையே விளம்பரம் போட்டு மக்களை மிரட்டி தியேட்டருக்கு விரட்டும் போது, எந்திரன் கிடைத்தது பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி தான்.
இதற்கு நடுவில் ஒரு சிலர் எந்திரன் படம் சதிகாரர்களின் கூட்டு முயற்சி, கலை துரோகம் என்றும் மற்றும் பலர் ரஜினி எங்க அந்த படத்தில் வருகிறார் ரஜினியோட மாஸ்க் போட்ட ரோபோ வேடத்தில் யாரோ ஒருவர் தான் வருகிறார் என்கிறார்கள். பணத்திற்காக கூட்டம் சேர்ந்து ரஜினி மேல் இருக்கும் ரசிகர்களுக்கு இருக்கும் பற்றை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் பலர். இதெல்லாம் உண்மையோ என்று கொஞ்சம் அலசிப் பார்த்தால், கலையும் கலை சார்ந்தவர்களும் பணத்தை மையாமாக வைக்காமல், கலையை கருத்தில் வைத்து உழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் காலகாலமாக இருந்து கொண்டு வருகிறது.
ரஹ்மான் தன் இசை திறமையை பணமும்,புகழும் அள்ளி தருகிற பாலிவுட் மற்றும் இன்டர்நேசனல் படத்திற்கு மட்டும் தான் காட்டுவார் என்றும் தமிழையும் வளர்த்து விட்ட தமிழ் நாட்டையும் மறந்து விட்டார் என்றும் கோபம் ஒரு பக்கம். நியாயமான கேள்வி தான்! அதே பணத்திற்காகவும், புகழுக்காகவும் தாய் நாட்டை விட்டு வெளி நாட்டுக்கு செல்வதும்,முடியாதவர்கள் ஒரு ஆன்சைட் வாய்ப்பு நமக்கு கிடைக்காது என்று ஏங்கும் மக்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்து கொண்டிருக்கையில் கலைத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? வைரமுத்து கூட வருத்தபட்டுக் கொண்டு இருக்கலாம் தனக்கு ஹிந்தியில் பாட்டு எழுத தெரியவில்லையே என்று!
ஷங்கர் அடுத்தவங்க காசை தண்ணியா செலவழிப்பார் என்று புலம்புகிறார்கள் ஏதோ அவங்க பணத்தை கொடுத்த மாதிரி. தயாரிப்பாளரே இதை பத்தி கவலைப்படறது இல்லை! டைட்டானிக்,ஜுராசிக் பார்க் போன்ற ஹாலிவுட் படத்தை மட்டும் பிரமாண்டமா இருக்குன்னு ரசித்து பல தடவை பார்ப்பபோம், ஷங்கர் எடுத்தால் திட்டிக்கிட்டே பார்க்கிறது.
ரஜினி கலாநிதி மாறனிடம் ஸ்பெஷல் ரகசிய டீல் போட்டு இருக்கிறாராம் சம்பளத்திற்கு. அன்று விதைத்த உழைப்பு,அவமானம் என்ற உரத்தின் பலன் தான் இன்று எளிதாக அறுவடை செய்ய முடிகிறது என்பதை நாம் மறந்துவிட கூடாது.
யார் என்ன சொன்னாலும், எந்திரன் என்ற வித்தியாசமான கெட் அப்பில் உருவெடுத்து இருக்கும் ரஜினியை ரசிக்க ஆவலோடு காத்து இருக்கும் ரசிகர்களுக்கு தலைவர் எந்த கெட் அப்பில் வந்தாலும் ஸ்டைலு ஸ்டைலு தான்! தலைவர் தலைவர் தான்!!
Saturday, June 19, 2010
முதல் முத்தம் !
உலகை மறந்து
மூச்சைக் கூட சிறிது நேரம் கழித்து
வெளி வருமாறு ஆணையிட்டு
பேசிக் கொண்டேயிருக்கையில்
கைகளால் கன்னத்தை வருடி
தயக்கத்தோடு விட்டு சென்று- பிறகு
கைகளால் கழுத்தில் மாலையிட்டு
முத்த மழையால் கன்னத்தில் ஒவியம் வரைந்து
தட்டு தடுமாறி புன்னகையுடன் தவழ்ந்து சென்ற
உன் முதல் முத்தத்தின்
ஈரம் இன்றும் என் கண்ணில் !!!
மூச்சைக் கூட சிறிது நேரம் கழித்து
வெளி வருமாறு ஆணையிட்டு
பேசிக் கொண்டேயிருக்கையில்
கைகளால் கன்னத்தை வருடி
தயக்கத்தோடு விட்டு சென்று- பிறகு
கைகளால் கழுத்தில் மாலையிட்டு
முத்த மழையால் கன்னத்தில் ஒவியம் வரைந்து
தட்டு தடுமாறி புன்னகையுடன் தவழ்ந்து சென்ற
உன் முதல் முத்தத்தின்
ஈரம் இன்றும் என் கண்ணில் !!!
Friday, May 14, 2010
அடடா மழைடா !!

இதமான மாலை நேரம்
வான் மழை பொழிய
மழை பாடல்கள் பல
என் நினைவில் வர
'வெண்மேகம் முட்ட முட்ட' என
நான் மழையில் நடனமாட
மனம் என்ற வீதியில்...
மழை தன் கடமையை முடித்துத் திரும்பி செல்லும் தருணம்..
அதற்காகவே காத்து இருந்தாற் போல்
அவசரமாக மேகத்தை விலக்கி வெளி வந்து
என்னைக் கண்டு சிரிக்கும் அழகு சூரியன்..
விண்ணில் மேகம் என்ற படகில்
என்னை உலா அழைத்துச் செல்ல
மண்ணில் மலர் சிரித்தது
கொஞ்சம் பொறாமையுடன் !
விடை பெற மனமின்றி
சூரியன் மெதுவாக திரும்பிச் செல்கையில்
எட்டிப் பார்த்து செல்லமாய் கண்ணடிக்கும் நட்சத்திரம் !
ஆசை என்ற கனவுகளுக்கும்
நிஜம் என்ற நினைவுகளுக்கும் இடையில்
நிதம் போராடிக் கொண்டிருக்கும் என்னை
மறுபடியும் சிறுபிள்ளையாய் மாற்றி
மகிழ்வித்த என் மழைக்கு மிக்க நன்றி!!!
Wednesday, May 12, 2010
இனி என்ன இருக்கு !!

அசைந்தாடும் இலையின் நுனி முதல்
அசையாமல் பார்க்கும் அழகான கட்டிடங்கள் வரை
எதையும் விட்டு வைக்காமல்
மனதில் நினைத்தது
மனதினில் நுழையாதது
சில நேரங்களில் மெளனத்தைக் கூட
தயக்கமின்றி பகிர்ந்து கொண்டு
நண்பர்களாய் வலம் வந்தோம் !
இடையில் வில்லனாய்ப் புகுந்து
நட்பை முறித்தது காதல் !
வில்லனை விலக்கும் போது
மீண்டும் பழைய நண்பர்களாக பழக முடியாமல்
நட்பையும் தள்ளி வைத்து..
இனி என்ன இருக்கு
நம் உறவில்....
கடந்த காலத்தில் கலந்து நின்ற
காவியமாய் உன் நினைவுகள் தவிர..
என்ன இருக்கு
இனி நம் உறவில்....
Thursday, April 01, 2010
நினைவுகள்!
சுவாசிக்கும் காற்றைக் கூட
கட்டுபடுத்த முடிகிறது
ஒரு கணப்பொழுதாவது - ஆனால்
உன் நினைவுகளை நிராகரிக்க முடியவில்லை
உன்னோடு பேசாமல் இருந்தாலும்..
--------------
நேற்று பெய்த மழையில்
முளைத்த காளான் போல
அன்று நீ சொன்ன காதலுடன்
இன்று நான்..
கட்டுபடுத்த முடிகிறது
ஒரு கணப்பொழுதாவது - ஆனால்
உன் நினைவுகளை நிராகரிக்க முடியவில்லை
உன்னோடு பேசாமல் இருந்தாலும்..
--------------
நேற்று பெய்த மழையில்
முளைத்த காளான் போல
அன்று நீ சொன்ன காதலுடன்
இன்று நான்..
Subscribe to:
Posts (Atom)





